மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

ன் வீட்டு எண்ணிக்கையில்
எங்களை எல்லாம் மீறி –
நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு;

அக்கா அண்ணன் கோபித்த போதும்
அம்மா திட்டிய போதும்
அப்பா அடித்த தருணங்களின் போதும்
வாலாட்டி, முகம் தடவி
குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு;

பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ
எதையேனும் உண்டோ இல்லாமலோ
கால் சுற்றி வந்த மிச்சத்தை –
இரவில் விழித்துத் தீர்த்த உண்ணத பிறவி;

ஒரு நிழல் அந்நியம் பேசினாலும்
விடாது துரத்தி
வாசல் வரை விட்டுவிட்டு
திண்ணையிலோ –
வீட்டின் வெளிப்புறத்திலோ உறங்கி
வாஞ்சையோடு வீட்டை காக்கும்
பொய்யில்லா அன்பு ஜீவன்;

வீட்டில் ஏதேனும் சண்டை என்றாலோ
மரணம் நிகழ்ந்தாலோ
தன் பங்கிற்கும் ஒருசொட்டு
கண்ணீர் விட்டு –
மனிதனை போல்
வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத; மெய்காப்பாளன்;

முழுக்க நீராட்டி
சந்தனம் தடவி
வீட்டிற்குள் இருத்தினாலும் –
வால் குழைத்து ஓடி
சேற்றினுள் விழுவதை சுதந்திரமாய் பாவிக்கும்
செல்லப் பிராணி;

வாழ்நாள் முழுக்க தன்னோடிருப்பதாகவே
அன்பு செலுத்தி
ஜூலி ஜூலி என்றோ
டைகர் டைகர் என்றோ
டாமி.. டோனி.. என்றோ
ஆங்கிலப் பெயர்களை மட்டும் நம்
நினைவிற்கு மிச்சம் வைத்துவிட்டு
வீட்டின் மரத்திற்கு உரமாகவோ
முனிசிபாலிடி வண்டியில் பிணமாகவோ
போடப்படும் நாய்;

காடுமேடு சுற்றி
நாலு வீடாவது ஓடித்திரியும் –
அக்கம்பக்க விசாரிப்புகள் ஏதுமின்றி
சங்கிலியால் கட்டப் பட்டு
குறைக்கும் போதெல்லாம் ஒரு அடியும் வாங்கி
எஜமானி அழைத்துச் சென்றால் மட்டுமே
இன்னபிற நடத்தி –
அப்பாவியாய் படுத்துக் கிடக்கும்
நம் செல்லப்பிராணியை பார்க்கையில்
பாவமென மனதில் –
பளிச்சென ஒட்டிக் கொள்ளாதார்க்கு
இக்கவிதை ஒருவேளை பிடிக்காமல் போகலாம்!
—————————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

  1. Starjan's avatar Starjan சொல்கிறார்:

    கவிதை மிக அருமையான வரிகள்.. நல்லாருக்கு.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ஸ்டார்ஜன். எங்கள் வீட்டில் ஒரு செல்லப் பிராணி இருந்தது. ஜூலி என்று பெயர்வைத்து வளர்த்தோம். மறக்க முடியாத அதன் அன்பான நினைவுகள் நிறைய உண்டு, என்னிடம் அத்தனை பாசமாக இருக்கும். வீடு மாற்றியதில் இழந்த பொருள்களில் அதுவும் ஒன்று. இக்கவிதை என் ஜூலிக்கு சமர்ப்பணம். நேரமொதுக்கி மறுமொழி அளிக்கிறீர்கள். மிக்க நன்றி ஸ்டார்ஜன்!

      Like

Starjan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி